தேவ கிருபைக்காக ஜெபம்
1
சர்வ வல்லமையுடைய நித்திய கடவுளே, இந்நாள் வரையும் எங்களைச் சுகமாய் நடத்தி வந்த எங்கள் பரம பிதாவாகிய ஆண்டவரே. இந்நாளிலும் உமது மிகுந்த வல்லமையால் எங்களைக் காப்பாற்றி, நாங்கள் யாதொரு பாவத்துக்கு உட்படாமலும், எந்தவிதமான மோசத்துக்கு அகப்படாமலும் உமது பார்வைக்கு நீதியாயிருக்கிறதை எப்பொழுதும் செய்கிறதற்கு நாங்கள் செய்கிற எல்லாவற்றையும் உம்முடைய ஆளுகையினாலே நடத்தியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
2
எல்லாம் வல்ல ஆண்டவரே, நித்திய பிதாவே, உமது பிரமாணங்களின் வழிகளிலும், உமது கற்பனைகளுக்கிசைந்த செயல்களிலும் ஈடுபட எங்கள் உடலையும் வாழ்க்கையையும் வழிநடத்தி, தூய்மைப்படுத்தி, ஆளுகை செய்யும். இவ்வாறாக இங்கும், எப்பொழுதும், எங்கள் உடலும் உள்ளமும் உமது வல்லமையால் பாதுகாக்கப்படச் செய்யும். எங்கள் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்
3
எல்லா அதிகாரமும் வல்லமையுமுடைய ஆண்டவரே, நீர் தாமே எல்லா நன்மைகளுக்கும் காரணர், உமது திருநாமத்தை நேசிக்கும் அன்பை எங்கள் நெஞ்சத்தில் பொருத்தி, மெய்த் தேவபக்தியை எங்களுக்குள்ளே வளரப் பண்ணி, சகல நன்மையிலும் எங்களை ஆதரித்து, உமது மிகுந்த இரக்கத்தினாலே இவைகளில் எங்களை நிலை நிறுத்த வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்